நிவாரண முகாம்களில் 9,000 பேர்; சீரமைப்புப் பணியில் 50,000 பேர்
சென்னை: மாண்டஸ் புயலின் சீற்றத்தால் சென்னை மாநகரில் சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட கணக்கீட்டில் தெரியவந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு ஆறு பேர் பலியாகிவிட்டதாகவும் சென்னையில் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இரண்டொரு நாள்களில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 3.45 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் 400 மரங்களும் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. சென்னை மாநகராட்சி, காவல்துறையைச் சார்ந்த 50,000 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
"மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வழிகாட்டி பலகைகள், இதர பொருள்களும் சேதமடைந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன," என்று அதிகாரிகள் கூறினர்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்டபோதிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாரல் மழை நீடித்து வருகிறது. பனிக்காற்று வீசுவதால் குளிர் தாங்க முடியாமல் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை. அதனால் போக்குவரத்தில் எவ்விதச் சிக்கலும் தடையும் ஏற்படவில்லை. எதிர்வரும் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

