சென்னை: பொங்கல் பண்டிக்கை யின்போது தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் இம்முறை பதினைந்து வெவ்வேறு வண்ணங்களில் தயாராகி வருவதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
இம்முறை 1.70 கோடி வேட்டிகளும் 1.77 கோடி சேலைகளும் வழங்கப்பட உள்ளதாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"இதுவரை 50 விழுக்காடு வேட்டி, சேலைகள் தயாராகிவிட்டன. ஜனவரி 10ஆம் தேதிக்குள் மொத்த உற்பத்தியும் முடிந்துவிடும். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
"இம்முறை இலவச வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டு 15 புதிய வண்ணங்களில் சேலைகள் விநியோகிக்கப்படும். அதேபோல் வேட்டி கரை ஓர் அங்குலம் அளவுக்கு இருக்கும்," என்றார் அமைச்சர் காந்தி.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் நூறாயிரம் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு தொடர்ந்து ஆறு மாத வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்துடன் தொடர்புள்ள மற்ற தொழில் வாய்ப்புகள் மூலம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் காந்தி குறிப்பிட்டார்.