ராமேசுவரம்: கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் செயல்படுபவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடியக்கரை உள்ளிட்ட தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில், அப்பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைக் காவல்துறையினரும் கடலோரக் காவல்படையினரும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டாலும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
மாண்டஸ் புயல் சீற்றத்தால் கடந்த சில நாள்களாக தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் புயல் கரையைக் கடந்துவிட்டதால் மீண்டும் கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வரும் நிலையில், கோடியக்கரை உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால் மீனவக் கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது.
எனினும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையின்போது கஞ்சா உள்ளிட்ட எந்தப் போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதிகளில் கண்காணிப்பு, சுற்றுக்காவல் பணி நீடிக்கும் எனத் தெரிகிறது.
அண்மையில் கூட ராமேசுவரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
நடப்பாண்டில் பலமுறை கஞ்சா கடத்தல் முயற்சிகளைக் காவல்துறை முறியடித்துள்ளது.

