சென்னை: வங்கக்கடலில் எதிர்வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக உருவெடுக்கும் பட்சத்தில், அதற்கு 'மோகா' என்று பெயர் சூட்டப்படும் எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது.
மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் மீள சில தினங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில், தமிழகம் மேலும் ஒரு புயலை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
மாண்டஸ் புயலால் சென்னையில் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. புயலால் சாய்ந்துவிட்ட மரங்களை அப்புறப்படுத்துவது, மின் கம்பங்களை மீண்டும் நிலைநிறுத்துவது உள்ளிட்ட பணிகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
புயல் கரையைக் கடந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது புயலாக மாறி, இலங்கை, அதனையொட்டிய தமிழக பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
'மோகா' புயல் தமிழகத்தை தாக்குமா என்பது ஓரிரு தினங்களில் உறுதியாகும்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. மேலும் பலத்த குளிர் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மூவாயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

