செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

48 கோவில்களில் கைப்பேசிக்குத் தடை

சென்னை: தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை கோவில்களில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கைப்பேசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "அடுத்தகட்டமாக தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக திருச்செந்துார் கோவிலில் கைப்பேசிக்கு 'டோக்கன்' முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். கைப்பேசி கொண்டு வரும் பக்தர்களிடம் அதைப் பெற்று தரிசனத்துக்குப் பிறகு அவற்றை ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கடவுளைத் தரிசிக்க செல்வோர் கைப்பேசி இல்லாமல் செல்வது நிம்மதி தரும் என்பதால் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறோம்," என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கைதான 485 மீனவர்களில் 461 பேர் விடுவிப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் 485 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 66 படகுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் 461 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது 24 இந்திய மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறைகளில் உள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, இலங்கை சிறையில் தற்போதுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அரசுடன் பேசப்பட்டு வருவதாக அமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

திமுகவில் உழைப்பவர்களுக்குப் பதவி கிடைக்காது என்கிறார் பழனிசாமி

திருப்பூர்: திமுகவைப் பொறுத்தவரையில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்காது என்றும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குத்தான் திமுகவில் பதவி அளிக்கப்படுகிறது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவில் உழைப்புக்‌கு மரியாதை இல்லை என்றார். திமுக மூத்த பிரமுகர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி அண்மையில் கட்சி, எம்பி பதவிகள் தொடர்பாக தெரிவித்த கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அக்கருத்தை மறைமுகமாக மையப்படுத்தி பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர் வருகை: உள்ளூர் தொழிலாளர்கள் வலியுறுத்து

கும்பகோணம்: வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாங்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதாக தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் தொழிலாளர்கள் புகார் எழுப்பி உள்ளனர். கும்பகோணத்தில் நேற்று முன்தினம் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் கட்டுமானம், கட்டட வர்ணம் பூசுதல், பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. "வெளிமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், எங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும்," என ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.