தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது வீர ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு என்றும் கோவிலுக்குத் தானமாக நிலம் வழங்கப்பட்டது குறித்த தகவல்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் அங்குள்ள பாய்ச்சல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள குழுவின் தலைவர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
"பாய்ச்சல் கிராமத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் இந்தக் கல்வெட்டு இருந்தது. இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, எவ்வளவு பழமை வாய்ந்தது எனத் தெரியவந்தது.
"11ஆம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழர் காலத்தில் வாலீஸ்வர முடையார் என்ற கோவிலுக்கு தானமாக நிலம் வழங்கி உள்ளதாக கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
"அதன் மேற்பரப்பில் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துகளில் பெண்ணை வடகரை என்பது தென்பெண்ணை ஆற்றின் வடகரைப் பகுதியாகும்.
"ஆடைநாடு என்பது ஆடையூர் நாடாகும். திருவண்ணாமலை, செங்கம் பகுதியை உள்ளடக்கியதாகும். வாணகபாடி என்பது திருக்கோவிலூரைக் குறிப்பதாகும்," என்றார் பிரேம் ஆனந்த்.

