ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்திச்செல்வதற்காகக் காரில் கொண்டு வரப்பட்ட கஞ்சா எண்ணெய், கிறிஸ்டல் மெத்தபெட்டமின் ஆகிய ரூ.160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, முத்திரை வைத்து நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
அத்துடன், இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சென்னை கொடுங்கையூர் பாக்யராஜ், 39, தனசேகர், 32, ஆகிய இருவரையும் கைது செய்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர்.
போதைப்பொருள்களை தாங்கள் சென்னையில் இருந்து கடத்தி வந்ததாகவும் மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாகவும் அவற்றை பின்னர் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தஇருந்ததாகவும் அதிகாரிகளிடம் இருவரும் கூறினர்.
சென்னையில் இருந்து ராம நாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல்பகுதி வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கடலோர மாவட்டங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி சுங்கச் சாவடி அருகே சென்ற காரை மடக்கி, அதிலிருந்த இருவரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
அவர்களது காரில் நடத்திய சோதனையில் 38 கிலோ கிறிஸ்டல் மெத்தபெட்டமின், 50 கிலோ கஞ்சா எண்ணெய் இருந்தன.
இருவரையும் கைது செய்து காருடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காரில் கடத்தி வந்தது அனைத்துலக அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருள்களான கஞ்சா எண்ணெய், மெத்தபெட்டமின் எனத் தெரிய வந்தது. இதன் அனைத்துலக மதிப்பு ரூ.160 கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

