கூடலூர்: நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில், உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு பெண்களில் மூவரை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர்.
காணாமல்போன மற்ற ஒரு வரையும் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகை சீகுர் வனப்பகுதியில் புகழ்பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்ட ஆயிரக் கணக்கான பக்தர்களில் சிலர் வழிபாடு முடிந்து கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் ஜக்கலூரைச் சேர்ந்த சரோஜா, 65, வாசுகி, 45, விமலா, 35, சுசீலா 56, ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காவலர்கள், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். திங்களன்று நள்ளிரவு வரை யாரும் மீட்கப்படவில்லை.
நேற்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தேடத் துவங்கியபோது, மூவரின் உடல் மீட்கப்பட்டது.
இதனிடையே, மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கன மழை கொட்டி வருவதால், செம் பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழ வரம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பூவிருந்தவல்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதுர வாயல், திருவேற்காடு பகுதியில் நான்கு தரைப்பாலங்கள் மூழ்கின.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குன்றத்தூர், காவலூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வன்னிப்பக்கம், நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், மீஞ்சூர் உள்ளிட்ட 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.