மதுரை: வரும் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறக்க எட்டு காளைகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார் கீர்த்தனா என்ற திருநங்கை.
பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வரும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த இவர்கள், வலிமை, வீரத்தைப் பறைசாற்றுவதற்கு பாலினம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீர விளையாட்டில் களம் காணத் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் சமயத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை வளர்ப்பவர்கள் அவற்றைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பொட்டப்பனையூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனாவும் தன் எட்டு காளைகளுக்குத் தீவிரப் பயிற்சி அளித்து வருகிறார். காளைகளைப் பராமரிப்பதற்கு இதர திருநங்கை தோழிகளும் அவருக்கு உதவி வருகின்றனர்.
"பலரும் அவரவர்களுக்கும் பிடித்த, படித்த துறைகளில் சாதித்து வருகிறார்கள். எனக்கு இந்தப் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதிக்க ஆசை உள்ளது. அதற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறேன்," என்று சொல்கிறார் கீர்த்தனா.
"2023 தைப்பொங்கல் சமயத்தில் எனது காளைகளைப் போட்டியில் களமிறக்கத் தயாராகி வருகிறேன். இக்காளைகளையே நாங் கள் எங்கள் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
"போட்டி நடைபெறும் வாடிக்குள் போய்விட்டு எங்கள் காளைகள் திரும்பிவரும் வரை எங்கள் உயிர் எங்களிடம் இருக்காது, அப் படி ஒரு பந்தம் உள்ளது," என்கிறார் திருநங்கை அக்ஷயா.
எனக்குக் குழந்தைகள் இல்லை. இந்தக் காளைகளைத்தான் நாங்கள் குழந்தைகளாக நினைக்கிறோம். இந்தக் காளைகள் வெற்றிபெறும்போது, என் பிள்ளைகள் ஒரு போட்டியில் வென்றால் எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைவேனோ, அதே அளவு மகிழ்ச்சி அடைவேன்.
திருநங்கை கீர்த்தனா.

