செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக ஒத்திவைத்தது

சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம், மழை காரணமாக 15 மாவட்டங்களில் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டம், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முழு மதுவிலக்கை அமல்படுத்த சரத்குமார் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். "முழுமையான மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான். அதை மாற்ற தொழிற்சாலைகளை உருவாக்கி, அதிக வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கலாம். ஆற்று மணல், கிரானைட் போன்ற தொழில்களை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்," என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு:

தங்கம் தென்னரசு விடுவிப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு திருவில்லிப்புத்தூர் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.