தமிழ்நாடு அமைச்சராகப் பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அமைச்சராகப் பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்

1 mins read
7cd587ca-9621-4d92-9598-b7d9d8348d24
படம்: இணையம் -

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசாங்கத்தின் விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சராக இன்று பதவி ஏற்று உள்ளார்.

மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று சரியாக காலை 9.30 மணிக்கு, உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.

ஆளுநர் மாளிகையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது.

அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் தமது 46வது வயதில் அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார்.