செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

'100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் முறையாக நடைபெறவில்லை'

மதுரை: மாநிலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஐஸ்கிரீம் தொழிற்சாலை திறப்பு

சேலம்: சேலத்தில் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள அதிநவீன ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வழி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதுடன், பல்சுவைகளில் குல்பி, கோன், கப் ஐஸ் கிரீம் உள்ளிட்டவை தயாரித்து விற்கப்பட உள்ளன.

அமைச்சர் உள்ளிட்ட ஐவர் விடுவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில், அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட ஐவரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

100 கைப்பேசிகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி: நெல்லை மாநகர்ப் பகுதியில் காணாமல் போன, திருட்டுபோன கைப்பேசிகள் குறித்து இணையக் குற்றத் தடுப்புக் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றை காவல் ஆணையர் அவினாஷ்குமார் உரிமையாளர்களிடம் அளித்தார். படம்: ஊடகம்