சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பை பயின்றுள்ள முதல் திருநங்கையான கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுச் சான்றிதழை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமல்ராஜ் கூறியபோது, "ஆண்டுதோறும் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து கொள்ளும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஆண் வழக்கறிஞர்களுக்கு நிகராக பெண் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
"திருநங்கை மாணவியான கண்மணி தன் கடின உழைப்பு, விடாமுயற்சியால் சமூகத்தில் வழக்கறிஞராக உயர்ந்துள்ளார்," என்று கூறினார்.
கண்மணி கூறும்போது, ''பாலின மாறுபாடு காரணமாக கடந்த 2017ல் என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, விடுதியில் தங்கி சட்டப்படிப்பை முடித்தேன். குடும்பத்தினர் என்னை ஏற்றுக்கொள்ளா விடிலும் சக மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் என்னை ஏற்றுக்கொண்டு கடந்த ஐந்தாண்டுகளாக எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர்.
"தற்போது என் குடும்பத்தினர் என்னை நேசிக்கின்றனர். திருநங்கை வழக்கறிஞர் என்பதில் எனக்கும் பெருமைதான். இத்துடன் நின்றுவிடாமல், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வெழுதி அதிலும் வெற்றிபெறுவதுதான் என் லட்சியம்,'' எனக் கூறியுள்ளார்.

