மாமல்லபுரம்: அண்மையில் மாமல்லபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரை கடந்தது. அப்போது 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறா வளிக் காற்று வீசியதாகக் கூறப்பட்டது.
இதனால் மரங்கள், மின்கம்பங் கள் சாய்ந்தன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் மீனவர் பகுதி யைத் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி பார்வையிட்டார்.
அங்குள்ள மீனவர் குழுவினர் படகு, வலை, இயந்திர சேதங்களைக் கணக்கிட்டு அவரிடம் கூறியதை அடுத்து, மீன்வளத்துறை அதிகாரி களிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக பாலாஜி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது. அத்துடன், வேகவதி ஆற்றில் கடந்த நான்கு நாள்களாக திடீர் வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் வேகவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாகலத்துமேடு, முருகன்குடியிருப்பு, தாயாரம்மன்குளம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதையடுத்து தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, தமிழகம், புதுச் சேரியில் வரும் 18ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பச்சைப் பெருமாநல்லூரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.

