நீலகிரி: நூற்றாண்டுகளைக் கடந்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தகுதியுடன் நீலகிரி மலையில் இழைந்து வருகிறது நீலகிரி மலை ரயில்.
ஆசியாவிலேயே மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடன் இயங்கும் இந்த மலை ரயிலில் பயணிக்க உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்துடன், மற்ற பயணிகள் யாருமின்றி முழுத்தொகை யையும் செலுத்தி முழு ரயிலையும் வாடகைக்கு எடுத்துப் பயணிக்கும் வசதியும் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ஆசிஷ் என்பவர் மலை ரயிலை மொத்தமாக ரூ.5 லட்சம் கட்டி வாடகைக்கு எடுத்து குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை உற்சாகமாகப் பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்துத் தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், "சிறப்பு சேவை அடிப்படையில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்துப் பயணிக்கும் வசதி உள்ளது. தேனிலவுத் தம்பதியரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிலரும் இது போன்று வாடகைக்கு எடுத்துப் பயணம் செய்து வருகின்றனர்," என்றனர்.

