பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் இரண்டு தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம்

பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் இரண்டு தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம்

2 mins read

சென்னை: பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடங்களைப் போதிக்க தகுதியான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் முடி தெரிவித்துள்ளார்.

"யுஜிசி' எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழுவின் வழி முறைகளைப் பின்பற்றி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க இந்தக் கல்வி ஆண்டு முதல் பட்டதாரி பேராசிரியர்கள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

"அத்துடன், அடுத்த கல்வி ஆண்டு முதல் பலதுறைத் தொழிற் கல்லூரிகளிலும் தமிழ்ப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

சென்னைத் தலைமைச் செய லகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல்முறையாக இந்தக் கல்வி ஆண்டில் இரண்டு புதிய தமிழ்மொழிப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

"தமிழர் மரபு, தமிழரும் தொழில் நுட்பமும் என்ற இவ்விரண்டு பாடங்களும் இக்கல்வி ஆண்டில் தமிழ்ப்பாடமாக நடத்தப்பட உள்ளன. தமிழ் தெரிந்த கல்லூரிப் பேராசிரி யர்களைக் கொண்டு பாடம் நடத்து வதற்கு அறிவுறுத்தி உள்ளோம்," என்று பொன்முடி தெரிவித்தார்.

தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான தமிழாசிரியர்கள் விரைவில் பொறியியல் கல்லூரி களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

"அதாவது, முதுநிலைக் கல்வி யில் தமிழ் படித்து 'சிலெட்', 'நெட்' ஆகிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 'பிஎச்டி' முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப் படுவார்கள்.

"இதற்கு ஏதுவாக தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

அது வரை, தற்காலிக ஆசிரி யர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படும்.

"அடுத்த கல்வி ஆண்டு முதல் பலதுறை தொழில் கல்லூரிகளிலும் தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் நடத்தப்படும்," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த மாண வர்களும் தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை படித்து வருகின்றனர்.

அவர்களும் தமிழர் மரபு பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் புதிய பாடநூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவர்களுக்கும் கற்றுத் தரப்படும் என்றும் பொன்முடி கூறினார்.