நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது. இந்தப் பாதிப்பால் 8,000 கோழி, வாத்து போன்ற பறவையினங்கள் அழிக் கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பாதிப்பின் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்புக்கரை, தலயாழம் பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்த வாத்து, பறவைகள் திடீரென செத்து மடிந்தன.
இதையடுத்து, கால்நடைத் துறையினரும் சுகாதாரத் துறை யினரும் இந்தப் பண்ணைகளில் ஆய்வு நடத்தியபோது, பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து பறவைக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான வாத்து, கோழிகளை அழிக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் 8,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன.
அத்துடன், இப்பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி, முட்டைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பறவைகள் அழிக்கப்பட்டது பண்ணையாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, தமிழகக் கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பண்ணைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்படுவதுடன், பண்ணைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 5 முதல் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் முட்டை கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் பண்ணைகளில் இருந்து ஒரு கோடி அளவிலான முட்டைகளும் இறைச்சிக் கோழிகளும் கேரளாவிற்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இப்போதைய சூழலில் அங்கு பறவை காய்ச்சல் பீதி நிலவுவதால் முட்டை, கோழி இறைச்சி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

