திருவண்ணாமலை: திருவண்ணா மலை அருகே கனமழை காரண மாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் தேங்குவதுடன் பெரிய பெரிய நத்தைகள் வீட்டுக்குள் படையெடுப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நல்லவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வனதுர்க்கை அம்மன் நகரில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அண்மையில் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில், வனதுர்க்கை அம்மன் நகரில் உள்ள வீடு, செடி, கொடி, மரம் என எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நத்தைகள் நகர்ந்துகொண்டே இருப்பது அப்பகுதியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நத்தைகள் வீட்டுக்குள் வந்துவிடுகிறது. மரத்திலும் தொங்கு கிறது. இரவு நேரங்களில் நத்தைகள் மட்டுமன்றி பூரான், தேள் போன்ற பூச்சிகள் நச்சுப் பாம்புகளும் வருவதாக அங்குள்ள மக்கள் அச்சப்படுகின்றனர்.
நத்தைகளை அகற்றுவதுடன் முறையான சாலைகள், கால்வாய் வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

