ஈரோடு: கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய நடமாடும் தகன மேடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு பகுதியில் இந்த நடமாடும் மயான சேவைத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியும் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து 14 ஆண்டுகளாக நடத்தும் மின் மயானத்தில் நகரப் பகுதிகளில் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன.
இந்நிலையில் கிராம மக்களுக்குச் சேவை அளிக்கும் விதத்தில் நடமாடும் எரியூட்டும் வாகனத்தை அந்த அமைப்பு தயார் செய்து கொண்டு வந்துள்ளது.
இதற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் 25 லட்சம் ரூபாய் செலவில் தகன மேடை வாகனம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, வாங்கப்பட்டுள்ளது.
இந்த தகன மேடை மூலம் வீடு களுக்கே சென்று, இறந்தவர்களின் உடல்களைப் பெற்று அடக்கம் செய்ய முன்வந்துள்ளது.
அதற்கான கட்டணம் ரூ.7,000 என்றும் ஒருமணி நேரத்தில் இறந்த வரின் உடல் எரியூட்டப்பட்டு, குடும்பத்தினரிடம் அஸ்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் ஒதுக்கப்படும் இடங்களுக்குத் தகன மேடை கொண்டு செல்லப்படும் என்றும் இதனால் எரியூட்டும் செலவு பாதியாகக் குறைவதுடன் நேரமும் மிச்சமாகும் என்றும் தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

