'2001க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கக்கூடாது'
சென்னை: பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தன்னுடைய டுவிட்டர் பதிவில், "நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைபிடிக்க தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதேபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் புகைபிடிப்பதற்கான வயதை 21ஆக உயர்த்த வேண்டும். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பதற்குத் தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.
இளைஞரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்
மதுரை: விபத்தில் படுகாயமடைந்து, மூளைச்சாவு அடைந்த கார்த்திக், 32, என்ற ஆடவரின் இதயம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஐந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவரான கார்த்திக், கடந்த 12ஆம் தேதி பைக்கில் சென்றபோது பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.
'39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் பாஜக இலக்கு'
சென்னை: மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் புதிதாக பல கட்சிகளும் இணைய வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மாநில மையக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், "லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறோம். இந்தப் பணிகளை வரும் ஜனவரிக்குள் முடித்து தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக் கூடிய வகையில் தயாராக உள்ளோம்,'' எனத் தெரிவித்துள்ளார்.

