செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

அன்புமணி கோரிக்கை

சென்னை: இணையம்வழி சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநரை முதல்வர் சந்திக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

"இணையம்வழி சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 15 நாள் களில் மட்டும் 5 பேர் இணையம்வழி சூதாட்டத்திற்குப் பலியாகியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து இணையம்வழி சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்,'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னை: அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 62 விளம்பரப் பலகைகள், 33 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, பெருநகரம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்படுகின்றன. மாநகராட்சி அலுவலர் களால் விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன.