சென்னை: சென்னையின் முக்கிய அடையாளமாக இருக்கும் மெரினா கடற்கரை காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதனால் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்காக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்த நிலையில் நேற்று அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில்தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 விழுக்காடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.
அது வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோ முடியாது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்துவதால் சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

