செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கம்பிவண்டியில் சிக்கிய பழனிவேல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கம்பிவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக, அந்தரத்தில் கம்பிவண்டி எங்கும் நகராமல் தொங்கிக்கொண்டிருந்ததால் பதைபதைத்து போனார் அமைச்சர். ஆனால், சற்றுநேரத்தில் மின்தடை சரியாக அவர் பத்திரமாக கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

போட்டியில் கழுத்தில் பாய்ந்த ஈட்டி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், போலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, ஈட்டி எறிதலின்போது 9ஆம் வகுப்பு மாணவன் எறிந்த ஈட்டி, மற்றொரு மாணவனின் கழுத்தில் பாய்ந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் மாணவர் சேர்க்கப்பட்டார். சிகிக்சைக்கான செலவு முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

பேருந்து மோதியதில் மூவர் பலி

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்ததாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு மோடி பயணம்

ஷில்லாங்: பிரதமர் மோடி மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவ்விரு மாநிலங்களிலும் வீட்டு வசதி, சாலை வசதி, விவசாயம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஏறக்குறைய ரூ.6,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.