கீழ்பென்னாத்துார்: திருவண்ணாமலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் தன் சொந்த செலவில் ஆறரை லட்சம் ரூபாய் செல வழித்து, பத்து கழிவறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள ஆசிரியைக்கு பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரியும் திருமதி ஆனி ரீட்டா, 50, பள்ளியில் கழிவறைகள் இல்லாததால் மாணவிகளும் ஆசிரியைகளும் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று இயற்கை உபாதையைக் கழிக்கும் நிலையைக் கண்டு வேதனை அடைந்தார்.
இதற்கு ஒரு தீர்வு காண, தன் சொந்த செலவில் கழிவறைகளைக் கட்டிக்கொடுக்க முடிவு செய்தவர், தமது சேமநல நிதியில் சேமித்த ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தன் பள்ளி மாணவி களுக்காக முழு நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளைக் கட்டி முடித்துள்ளார். இதனால், பள்ளியில் பயிலும் 276 மாணவி களும் ஆசிரியைகளும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேறி உள்ளதாகக் கூறியுள்ளார் ஆனி ரீட்டா.
நீண்ட நாளாக இருந்து வந்த தங்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு உதவியிருக்கும் நல்லாசிரியைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று மாணவிகள் மனம் நெகிழ்ந்து கூறியுள்ளனர்.

