நாகர்கோவில்: பாஜகவுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி முறிந்துவிடும் என்றும் அதேவேளையில் திமுக-பாஜக கூட்டணி அமையும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "அறிவுரை கூற சி.வி. சண்முகத்துக்கு தகுதி இல்லை," என பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறிந்துவிடும்.
"சரியான தலைமையும் கொள்கையும் இன்றி அதிமுக தடுமாறி வருவதால் அதிமுகவினர் விரக்தியில் உள்ளனர். அதனால்தான் சி.வி. சண்முகம் இப்படிப் பேசி வருகிறார்.
"இன்றைக்கு அதிமுக பாஜகவை கழற்றி விடு கிறதா? பாஜகவை அதிமுக கழற்றி விடுகிறதா? என்பது அவர்கள் கதை. இதுகுறித்து நாம் பேசுவதற்கு அவசியம் இல்லை," என்றார்.

