'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' எனப் பாடத் தோன்றுவதாக நினைவுகூர்ந்த ஸ்டாலின் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் முன்வர கோரிக்கை

'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' எனப் பாடத் தோன்றுவதாக நினைவுகூர்ந்த ஸ்டாலின் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் முன்வர கோரிக்கை

2 mins read

சென்னை: அர­சுப் பள்­ளி­களை மேம்­ப­டுத்த முன்­னாள் மாண­வர்­கள், தன்­னார்­வ­லர்­கள், பொது­மக்­கள் முன்­வர வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அழைப்பு விடுத்­துள்­ளார்.

முன்­னாள் மாண­வர்­கள் சங்­க­மித்து மகி­ழ­வும் பள்­ளி­யின் தேவை­களை நிறை­வேற்­ற­வும் ஏது­வாக தன்­னார்­வ­லர்­க­ளி­டம் நிதி­பெற்று அர­சுப் பள்­ளி­களைப் பலப்­ப­டுத்­தும் திட்­டம் இன்று 19ஆம் ­தேதி தொடங்கி வைக்­கப்­படுகிறது என அவர் மேலும் தெரி­வித்­தார்.

சென்னை சேத்­துப்­பட்­டில் உள்ள கிறிஸ்­த­வக் கல்­லூரி மேல்­நி­லைப் பள்­ளி­யில் முன்­னாள் மாண­வர்­கள் சந்­திப்­புக் கூட்­டம் நடை­பெற்­றது.

முதல்­வர் ஸ்டா­லி­னும் 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இப்­பள்­ளி­யில் பயின்­ற­வர் என்­ப­தால், நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று தனது பள்­ளிக்­கால அனு­ ப­வங்­களைப் பகிர்ந்து­கொண்­டார்.

அப்­போது பேசிய அவர், "நான் இந்நிகழ்ச்­சி­யில் ஒரு முதல்வரா­கப் பங்­கேற்­க­வில்லை. மாறாக ஒரு மாண­வ­ராக, அனை­வ­ரின் நண்­ப­ராகக் கலந்துகொண்­டுள்ளேன்," எனத் தெரி­வித்­தார்.

நாம் படித்த பள்­ளிக்­குச் செல்­லப்போகி­றோம் என்ற உணர்வில் இர­வில் தூக்­கம் இல்­லா­மல் இருந்ததா­கத் தெரி­வித்த அவர், இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­ளும்­தருணத்தில் பல்­வேறு நினை­வு­கள் தமக்கு வரு­வ­தா­கக் கூறி­னார்.

"இங்கே இருக்­கக்­கூ­டிய சிலர் முகத்தை எல்­லாம் பார்க்­கும்­போது, சில ஆசி­ரி­யர்­க­ளைப் பார்க்­கும் போது, குறிப்­பாக தமி­ழா­சி­ரி­யர் ஜெய­ரா­மனை பார்க்­கும்­போது 'ஞாப­கம் வருதே, ஞாப­கம் வருதே' என்­கிற பாட்­டுத்­தான் என் நினை­வுக்கு வரு­கிறது. அதைப் பாட­வும் ஆசை­மேலோங்குகிறது.

"உல­கத்­தி­லேயே மிகப்­பெ­ரிய மகிழ்ச்சி என்­பது கடந்­த­ கால இனி­மை­யான நினை­வு­கள்­தான். ஒவ்­வொரு மனி­த­னை­யும் மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருப்­பது இது­போன்ற ஞாப­கங்­கள்­தான்," எனக் கூறி­னார்.

தொடர்ந்து பேசி­ய­ ஸ்டாலின், "இந்­தப் பள்­ளி­யில்­தான் என் சகோ­ த­ரர்­கள் முத்து, அழ­கிரி ஆகிய இரு­வ­ரும் படித்­துக் கொண்­டி­ருந்­த­னர். அதனால், எனக்­கும் இங்கு எளி­தாக இடம் கிடைத்­து­வி­டும் என நினைத்­துக் கொண்­டி­ருந்­தேன். ஆனால், இங்கு நடத்­தப்­பட்ட நுழை­வுத் தேர்­வில் நான் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்­து­விட்­டேன். என்னைச் சேர்த்­துக்கொள்ள மறுத்துவிட்டனர். அப்­போது சென்­னை­யில் மேய­ராக இருந்த குசே­லரின் பரிந்துரையில் இடத்­தைப் பெற்று படித்­தேன்," என்றார்.

"ஒரு பள்­ளி­யில் இருந்து எத்­த­னையோ மருத்­து­வர்­கள், பொறி­யா­ளர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் வந்­தி­ருப்­பார்­கள். ஆனால், ஒரு முதல்­வரை உரு­வாக்­கிய பெருமை இப் பள்­ளிக்கு வந்து சேர்ந்­தி­ருக்­கிறது என்­றால், அதில் எனக்­கும் பெருமை தான்," என்று தெரிவித்தார்.

மாண­வப் பரு­வம் திரும்­பக் கிடைக்­காத பரு­வம் என்றும் கூறிய ஸ்டாலின், முன்­னாள் மாண­வர்­கள் தான் பயின்ற பள்­ளி­யைப் பலப் படுத்த உத­வ­வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்டுள்ளார்.