சேலம்: சேலத்தில் துப்பாக்கி தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இளையர்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அந்த இளையர்களுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் மிக விரைவில் அந்தப் பிரமுகர்களிடம் காவல்துறை விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நவீன், சஞ்சய் பிரகாஷ், கபிலன் ஆகிய மூன்று இளையர்கள் யூடியூப் காணொளிகளைப் பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டுகள் தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்த ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து தமிழக காவல்துறை மூவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் எனத் தெரியவந்தது என்றும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
"விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போன்று, தமிழகத்திலும் புதிய இயக்கத்தை துவங்கி உள்ளோம். வணிக வளாகங்களை தாக்கவும் முக்கிய தலைவர்களை கொல்லவும் திட்டமிட்டு செயல்பட்டோம்," என்று புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் கபிலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், கைதான மூன்று இளையர்களுக்கும் தமிழகத்தில் இயங்கி வரும் அரசியல் கட்சிகளின் முக்கியப் புள்ளிகளின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பல்வேறு விவரங்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி உள்ளதாகவும் அக்கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பயங்கரவாத செயல்பாடுகளில் தொடர்பு இருப்பது உறுதியானால் அந்தப் பிரமுகர்கள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

