பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போராட்டம் நடத்தும் கிராம மக்களுடன் இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, புதிய விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இரண்டாயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களும் 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, பரந்தூர் பகுதியில் போராட்டம் வெடித்தது.
விவசாய நிலங்களை தர இயலாது என 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த பல நாள்களாக கிராம மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. நேற்று காலை இம்மக்கள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.
மேலும், கையில் கறுப்புக் கொடி ஏந்திச் சென்ற கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் போவதாக தெரிவித்தனர்.
எனினும், இந்தப் பேரணியை காவல்துறையினரும் அதிகாரிகளும் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். அப்பகுதி கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. எனவே தங்கள் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த 13 கிராம மக்களும் ஏற்கெனவே தொடர்ந்து 145 நாள்களாக இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தங்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
அச்சமயம், கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.