நிர்மலா சீதாராமன்: தமிழகத்தில் வரி வசூல் மனநிறைவு அளிக்கிறது
சென்னை: தமிழகத்தில் வரி வசூல் நிலவரம் மனநிறைவு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழகத்தில் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்காதது வருத்தம் அளிப்பதாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "புதிதாக எத்தனை பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளார்கள் என்பதும் முக்கியம். வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
புதுவை, யாழ்ப்பாணம் இடையே படகுச் சேவை: இலங்கை அமைச்சர் தகவல்
கொழும்பு: புதுவை, யாழ்ப்பாணம் இடையே அடுத்த மாதம் முதல் படகுப் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை அரசுத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் துறைமுகம், கப்பல், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்தப் படகுப் போக்குவரத்தின் மூலம் ஏராளமான வர்த்தகர்கள் பயனடைவர் என்றார். "இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இந்தியர்கள் அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, இந்தப் படகுச் சேவை, அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது. இதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக இலங்கைக்கு வெளிநாட்டு வருவாய் அதிகரிக்கும்," என்றார் அமைச்சர்.
ராகுல் நடைப்பயணத்தில் கமல் பங்கேற்பு
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இதையடுத்து இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, எதிர்வரும் 24ஆம் தேதி ராகுல் காந்தி டெல்லியில் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, அதில் கமல்ஹாசனும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்றார். மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு: 19 பாஜகவினர் கைது
ஈரோடு: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் உருவப்படத்தை எரிக்கும் போராட்டம் காரணமாக ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் 19 பேரை காவல்துறை கைது செய்தது. அண்மைய சில தினங்களாக பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுப் போக்கு குறித்து மத்திய அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோவின் உருவப்படத்தை எரிக்கும் போராட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அதில் பாஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். உருவப்படத்தை எரிக்க முயன்ற பாஜகவினரை தடுத்த காவல்துறையினர் பின்னர் 19 பேரை கைது செய்தனர்.
குமரியில் ஒரு மாதத்தில் குவிந்த
நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள்
குமரி: கடந்த சில தினங்களாக குமரியில் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள முக்கியமான சுற்றுலா பகுதிகளில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் நடப்பு சுற்றுலாப் சீசனையொட்டி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை சில நாள்களில் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

