சென்னை: வெளி மாநிலம், வெளி நாடுவாழ் தமிழர்கள் குறித்த தரவு தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள், செம்மொழியாம் தமிழ்மொழியைத் தழைத்தோங்கச் செய்திட வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு, கருத்துப் பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு சிற்றரசில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபால கிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான், சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
இவ்வாரியம், வெளி மாநிலம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக, 5 கோடி ரூபாய் 'வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி' என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.

