சேலம்: சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்ட முடியாதா, அப்படியென்றால் அதற்கு வழங்கப்பட்ட 4,000 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் புகழ்பெற்ற சேலம் இரும்பாலையை மத்திய அரசு விற்பது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி. மத்திய நிதியமைச்சின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும் இரும்புத் துறை அமைச்சும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அதற்கான பாதுகாப்புச் சூழலை மாநில அரசு ஏற்படுத்தித் தரவில்லை. இருந்தாலும் அதற்கான நிதி ஒப்பந்தப் புள்ளிகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அது, ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
"இந்த நிலையில் சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப் படுத்தி வருவதையே அமைச்சர் சிந்தியாவின் பதில் உணர்த்துகிறது. இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் இரும்பாலையை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட நிலையில் எவரும் ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதன்பின் கொரோனா காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவற்றை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.
சேலம் இரும்பாலை தமிழகத்தின் அடையாளம், அது தமிழகத்தின் பெருமை. அந்த இரும்பாலை தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதற்காக சேலம் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது. அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஓர் ஏக்கர் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொடுத்ததால்தான் சேலம் இரும்பாலை உருவானது. இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் வாய்ந்த ஆலையாக தரம் உயர்த்து வதே அந்த ஆலை அமைவதற்காக சேலம் மக்கள் செய்த தியாகங்களுக்கு மத்திய அரசு செய்யும் பதிலுதவியாகும்.
சேலம் இரும்பாலையை நவீன மயமாக்கி புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும்கூட, அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடிக்கிறது. அதற்கு காரணம், அந்த ஆலைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதே. மத்திய அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. அதை தமிழகமும் அனுமதிக்காது.
ஒருவேளை சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்ட முடியாது என்றால் அந்த ஆலைக்கான 4,000 ஏக்கர் நிலங்களை அவற்றை வழங்கிய உரிமையாளர்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்," என அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

