சென்னை: இந்தியாவில் தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தைப் பிடிப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
"இந்தியாவிலேயே தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. முதல் இடத்திற்கு முந்துவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செய்கிறது.
அந்த வரிசையில், நம் பள்ளி - நம் பெருமை என்ற திட்டத்தை இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். பள்ளிப்பிள்ளைகள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் மனநிறைவோடு கற்கக்கூடிய சூழலை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி தந்துகொண்டு இருக்கிறது.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவுச்சொத்தை உருவாக்கித் தந்து வருகிறோம்.
அரசு பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய சொத்துகளுமாகும். வெளிப்படைத்தன்மை இதை மனதில் வைத்து பள்ளி மேலாண் மைக்குழுக்களை அமைத்தோம். 37,558 பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவை மூலம் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சிகள் மற்றும் சமூகத்தின் நலம்விரும்பிகள் அனைவரும் ஒரு கட்டமைப்பாக, நிறுவனமாக ஒன்றிணைந்தனர். தங்கள் பள்ளிக்கு எது தேவையோ அதனை அவர்களே உருவாக்கித் தர முன்வந்துள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். "எல்லாவற்றையும் அரசாங்கம் செய்துவிட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். நம் பள்ளிகள் மேம்பட உலகத் தமிழர்களும், தொழில் அதிபர்களும் வாரி, வாரி வழங்குங்கள். நாம் விரும்பும் கனவுப்பள்ளியை நாம் உருவாக்கு வோம்," என்றார் முதல்வர்.

