சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார்.
அனைத்து சார்பு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைமைக் கழக நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார்.
இந்த நியமனங்கள் முடிந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

