சென்னை: வாட்ஸ்அப் மூலம் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மாணவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் நல்ல நண்பர் போல பழகிய அவர் பின்னர் ஆபாச படங்களைக் கேட்டு வற்புறுத்தியதாக தனது புகாரில் மாணவி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரைச் சேர்த்த புனிதா (புனை பெயர்), பாரிமுனையில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் வரலாறு 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகிறார்.
அதே பேருந்தில் பயணிக்கும் ஆர். கே. நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ படித்து வரும் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த பரத், 19, என்பவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
இருவரும் தங்களின் கைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதன் பிறகு இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் உரையாடல் மற்றும் காணொளி வழியாகப் பேசி வந்துள்ளனர்.
இம்மாதம் 15ஆம் தேதி இரவில் மாணவியும், கல்லூரி மாணவன் பரத்தும் இரவு வீடியோகாலில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த மாணவன், திடீரென மாணவியின் ஆடையைக் கழற்றுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார்.
நண்பனாக நினைத்துப் பழகியவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் மாணவி அதிர்ச்சியடைந்தார்.
உடனே கைபேசி இணைப்பை மாணவி துண்டித்துவிட்டார். இருப்பினும் பரத் தொடர்ந்து அந்த மாணவிக்கு விடாமல் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவி, உடனே சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது நடந்ததைத் தெரிவித்தார்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் மாணவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து பரத்தைக் கைது செய்தனர்.

