சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் ஏராளமான கட்டுமானத் திட்டங்கள் முடங்கிப்போயின. கட்டுமானத்திற்கான அனுமதியைப் பெற்றும் அந்தக் காலகட்டம் முடிவுற்றும் கட்டுமானத் திட்டங்களை முடிக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.
பின்னர் படிப்படியாக தளர்வுகள் வந்த பின், கட்டுமானத் தொழில்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. இருப்பினும் மணல், சிமென்ட, ஜல்லி, கான்கிரீட் கம்பிகள், எம்சேண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளதும் கட்டுமானப் பணிகள் முடங்கியதற்கு காரணமாகியுள்ளன.
அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப்போயுள்ளன.
விலையேற்றத்திற்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டடப் பணிகள், விலை உயர்வால் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட தொகைக்குள் கட்டடத்தைக் கட்டிக்கொடுக்க முடியாத நிலைக்கு கட்டுநர்களும் ஒப்பந்தப் பொறியாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கான அனுமதியை மேலும் இரண்டு ஆண்டு காலம் நீட்டிப்பதாக தமிழக வீட்டுவசதித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள ஒருங்கிணைந்த கட்டட விதிகளின் படி தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, முதலில் 5 ஆண்டுகள் அனுமதியளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கட்டுமானத் திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கை அடிப்படையில், குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கட்டடம் கட்டி முடிப்பதற்கான அனுமதி பெற்றவர்களின் அனுமதிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் திட்டங்களின் இழப்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.

