மதுரை: மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் அருகே காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் விழாவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
ஜனவரி 3, 4ஆம் தேதிகளில் இக்கோயில் திருவிழா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இக்கோயில் திருவிழா தொடங்கியதையொட்டி, 15 நாள்கள் மாடுபிடி வீரர்கள், ஊர் மக்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இப்போட்டியைத் தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை அழைக்க ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்முறை நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரர்களுக்கும் வெல்லும் காளைகளுக்கும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஏராளமான பரிசுப் பொருள்கள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியை, வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டுதான் ஊர் மக்கள் நடத்துகின்றனர்.
பார்வையாளர்களுக்கான கேலரிகளை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும், வீரர்களுக்கும் காளைகளுக்கும் அளிக்கப்படவிருக்கும் பரிசுகள் குறித்து முடிவெடுக்க விழாக் குழுவினர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
நேற்று நடந்த இக்கோயில் விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஊர் மக்கள், ஜல்லிக்கட்டு குழு நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கோயில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

