2 கிலோ போதைப்பொருளுடன்
சிக்கிய உகாண்டா நாட்டுப் பெண்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சுங்கத் துறை அதிகாரிகள், சென்னையில் வந்திறங்கிய விமானப் பயணிகளிடம் தீவிர சோதனையை முடுக்கிவிட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண்ணின் பயணப் பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்த அட்டைப் பெட்டி ஒன்றில் இருந்து 2 கிலோ 196 கிராம் 'மேத்தோ குயிலோன்' மற்றும் ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் தமிழறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை இராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

