சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் வீதிக்கு வந்து தனிக்கட்சி நடத்த தைரியம் இருக்கிறதா என்று எடப்பாடி பழனி சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகம், வழக்கறிஞர் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன் படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர்.
அந்த வகையில் கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்டப்படி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி யளித்தார்.
"எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. நாடளுமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்கத்தான் எல்லோரும் வருவார்கள்.
"1989, 1991ஆம் ஆண்டுகளில் ஓபிஎஸ் யார் என்று தெரியாது.
1996லும் கூட அவர் யார் என்று தெரியாது. 2001ஆம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991ஆம் ஆண்டே அமைச்சராகிவிட்டேன்.
"அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு," என்று தெரிவித்துள்ளார்.

