கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள கைக்கடிகாரம் குறித்து பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், "நான் கட்டி உள்ள ரபேல் 'வாட்ச்' தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை இந்த கைக்கடிகாரம் குறித்து எவ்வளவு பேசுகிறார்களோ அவ்வளவு நல்லது எனக்கு. எனது கைக்கடிகாரம் தொடர்பான பேச்சு அதிகமாக வந்த பின்னர் கைக்கடிகாரம் குறித்த உத்தரவாதம், அதன் தொடர்பான எண்ணை இணையத்தில் பதிவேற்றம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு 100 பேருக்கு காதுகேட்கும் கருவி, செயற்கை கால்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற அண்ணாமலை, காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்களை வழங்கி உரை நிகழ்த்தினார்.
"எழுபது ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறோம். அனைத்து அமைச்சர்களும் இது குறித்து பேச வேண்டும். நான் இந்த 'வாட்ச்' ரசீது தொடர்பான அனைத்தையும் வெளியிடும்போது, திமுகவின் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் பதிவு செய்ய இணையத்தளம் மற்றும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துவேன்.
"லஞ்சம், ஊழல் பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. தி.மு.க. குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் இது குறித்து வேறு யாருக்கும் பேச தைரியமும் இல்லை, தகுதியும் இல்லை.
"ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப் பட்டியலையும் வெளியிடு வோம். அவர்கள் தைரியம் இருந்தால் பேசட்டும்.
"அண்ணாமலை, தி.மு.க. குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிடுவாரா அல்லது ஒரு கைக்கடிகாரத்தின் ரசீதை வெளியிடு வாரா என்று எப்போது டீக்கடையில் பேச்சு தொடங்குதோ அப்போதுதான் அரசியல் ஆரம்பமாகும். நமக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதை நாம் வாக்காக மாற்ற அயராது உழைக்க வேண்டும். நம்மை போன்று ஆர்ப்பாட்டம், போராட்டங்களை எந்த கட்சியினரும் நடத்தவில்லை.
"தமிழகத்தில் 25 எம்.பி.க்களை பெற்று அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் பா.ஜனதா இருக்கிறது. வாரிசு அரசியலை முடிவு கட்ட நமக்கு வாய்ப்பு இருக்கிறது," என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

