சென்னை: தமிழ் நாட்டில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இன்று முதல் கொவிட்-19 பரி சோதனைகள் செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், "தமிழகத்தில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.
"கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளவேண்டாம்," என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிக்கான வழிகாட்டுதலின்படி, மக்கள் அதிகம் கூடும் ரயில், விமான நிலை யங்கள், உள் அரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொவிட் பரிசோதனை, சிகிச்சை பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அனைத்துலக விமான நிலை யங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் கொவிட் பரிசோதனை, சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தமிழக விமான நிலை யங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத் துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி உள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்றும் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரே பகுதியில் மூவருக்கு மேல் இத்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

