நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கைப்பேசி கோபுரத்தின் மூலம் பதிவான தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா கோடநாடு பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு சென்று ஓய்வெடுப்பது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்து வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு அவர் காலமான பிறகு அந்தப் பங்களாவில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தப் பங்களாவில் சில முக்கிய ஆவணங்கள், பொருள்களை சிலர் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலையாவதற்குள் அந்த ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சில முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டதாகவும் அது தொடர்பான ஆதாரங்களை காவல்துறையின் சிறப்புப் படை சேகரித்து வருவதாகவும் ஊடகங்களில் அவ்வப்போது பரபரப்புத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கனகராஜ் ஏற்பாட்டில், கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து கூலிப்படை தலைவன் சயான் காவல்துறையிடம் பல முக்கியமான தகவல்களைக் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கோடநாடு பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரங்கள் மூலம் பதிவான பல்வேறு உரையாடல்கள், தகவல்களை சிலர் அழித்திருப்பது தெரியவந்துள்ளது. அழிக்கப்பட்ட அந்த முக்கிய தகவல்களை மீட்டெடுக்க காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில தகவல்களை மீட்டுள்ளோம். மேலும், சிபிசிஐடி மேற்கொண்ட நடவடிக்கைகளின்போதும் சில விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் விசாரணை முடிவுக்கு வரும்," என காவல்துறை தரப்பில் கூறப்படுவதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூலிப்படைத் தலைவன் சயான் அளித்துள்ள தகவல்கள், மீட்டெடுக்கப்படும் கைப்பேசி கோபுரத் தகவல்களின் அடிப்படையில் சில முக்கியப் பிரமுகர்கள் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

