சேலம்: அரசுப் பள்ளியில் மது போதையில் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சேலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்குத் திரண்டு வந்து அந்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சேலம் மாவட்டம், சேலத்தாம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுரேஷ்பாபு (வயது 48) என்பவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் மாணவிகளுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. எனினும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மாணவிகளின் கழிப்பறை அருகில் நின்று புகை பிடிப்பது, கை, கால்களைப் பிடித்துவிடச் சொல்வது என ஆசிரியர் சுரேஷ்பாபுவின் செயல்கள் அத்துமீறியதாக இருந்துள்ளன. மேலும் மாணவிகளிடம், பள்ளியில் நடப்பதை வீட்டில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் சுரேஷ்பாபு மதுபோதையில் பள்ளிக்கு வந்துள்ளார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட மாணவிகளின் பெற்றோர் பலர் பள்ளிக்குத் திரண்டு வந்தனர்.
இதையடுத்து அவரிடம் பெற்றோர் பலர் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளிக்க முடியாத ஆசிரியர் சுரேஷ்பாபுவை சிலர் தாக்கியதாகத் தெரிகிறது.
பெற்றோர் சிலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெற்றோரை சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ்பாபு மது போதையில் இருந்தது தெரியவந்தது.
அதன் முடிவில் ஆசிரியர் சுரேஷ்பாபு மீதான புகார்கள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து அவர் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுரேஷ்பாபு ஆசிரியராகப் பணியாற்றி வரும் இதே பள்ளியில் அவருடைய மனைவியும் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
சுரேஷ்பாபுவுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

