சென்னை: மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2,467 கோடி ஒதுக்கி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், மிக விரைவில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் பயணிகள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையம், வெளிநாட்டு விமான நிலையம் என 2 முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அனைத்துலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் 2025ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கப்படும்போது, அதில் 33 தானியங்கி நுழைவாயில்கள், 20 ஏரோ-பிரிட்ஜ்கள் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், விமான நிலைய எல்லையை ஒட்டியுள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் விரிவாக்கப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
"மேலும் கொரோனா நெருக்கடியாலும் பணிகள் தாமதமடைந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் இந்தப் பணிகளைச் சரியாக செய்து முடிக்க முடியவில்லை.
"எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு ஆண்டுக்கு மூன்றரை கோடி பயணிகளை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையம் செயல்படும்," என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் சென்னை விமான நிலையத்தில் நான்கு முனையங்கள் செயல்படும் எனத் தெரியவந்துள்ளது.
அவற்றுள் இரண்டு முனையங்கள் உள்நாட்டு விமான நிலையமாகவும் மீதமுள்ள இரண்டு முனையங்கள் அனைத்துலகப் பயணிகளுக்காகவும் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

