செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

போதைப்பொருள் விற்ற கும்பல் கைது

ஈரோடு: போதை மாத்திரைகளைப் பொடியாக்கி விற்ற 11 பேரை ஈரோடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பொடியாக்கப்பட்ட போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்தி உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் என்பவர் பிடிபட்டார். தொடர்ந்து விசாரித்தபோது, 11 பேர் கொண்ட கும்பல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் புற்று நோய், ஆஸ்துமா நோயாளிகள் உட்கொள்ளும் வலி நிவாரணிகளுடன் சில பொருள்களைக் கலந்துள்ளனர். பின்னர் அதை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் பலருக்கும் உடலில் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், பணத்தைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 11 பேரில் ஒருவர் தன் சகோதரியிடம் நகை பறிக்கப்பட்டதாக ஈரோடு காவல்துறையில் பொய்ப் புகார் அளித்து தன் கூட்டாளிகளைச் சிக்க வைக்க முயன்றார். அவரது புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பல் சிக்கியது.

கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் குறித்து விமர்சித்த சசிகலா

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரங்கள் பற்றி மட்டுமே செய்தியாளர்கள் தம்மிடம் கேள்விகள் எழுப்புவதாக சசிகலா நடராஜன் குறைகூறியுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் ஏன் கருத்து கேட்பதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் அஞ்சுவதாக குறிப்பிட்டார்.

ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்பு: விளக்கம் அளித்த கமல்ஹாசன்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தமது பங்கேற்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். "மண், மொழி, மக்களைக் காக்க ஓர் இந்திய குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்," என்று அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

ரூ.68 லட்சம் கொள்ளை தொடர்பாக கார் ஓட்டுநர் கைது; நால்வருக்கு வலைவீச்சு

சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் ஒருவர் கைதானார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த விஸ்வநாதன் நகைக்கடை நடத்தி வருகிறார். அண்மையில் சென்னையில் உள்ள நகைக்கடை பட்டறையில் இருந்து தங்க நகைகளை வாங்கி வர, தமது ஊழியர்கள் இருவரை பணத்துடன் அனுப்பி வைத்தார் விஸ்வநாதன். அவ்விரு ஊழியர்களும் சென்னைக்கு வந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழகக் காவல்துறை, கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை வைத்து அதன் ஓட்டுநரைக் கைது செய்தது. அவருடன் நடத்தப்பட்ட விசாரணையின்போது நகைக்கடை ஊழியர் கபானியின் உறவினரான சையத் அப்துல் பாஜி என்பவர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டார் என்பது தெரியவந்தது. கார் ஓட்டுநரிடம் இருந்து ஏழு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளையர்கள் நால்வருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

டிஜிபி: தலைக்கவசம் அணியாவிட்டால் காவலர்களின் வாகனம் பறிமுதல்

சென்னை: தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினரே தலைக்கவசம் அணிவதில்லை எனப் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, தலைக்கவசம் அணியாவிட்டால் காவல்துறையினரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தலைக்கவசத்தைக் கொண்டு வந்து காண்பித்த பிறகே அவர்களின் வாகனம் ஒப்படைக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.