சென்னை: தமிழகத்தில் 18ஆவது சுனாமி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். தமிழகத்தையும் அது விட்டுவைக்கவில்லை.
தமிழகத் தலைநகர் சென்னை முதல் குமரி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
குறிப்பாக, ஆக அதிகமாக நாகப்பட்டினத்தில் ஆறாயிரம் பேரும் கடலூரில் 610 பேரும் சென்னையில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் மாண்டுவிட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்சேதமும் ஏற்பட்டது.
இந்நிலையில், சுனாமி தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் திரண்ட ஏராளமானோர் இறந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அமைப்புகள் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. குழந்தைகள், குடும்பத்தார், நண்பர்களை இழந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

