செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ராமேசுவரத்தில் கடல் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்ட ஐம்பது வீடுகள்

சென்னை: கடல் அரிப்பு காரணத்தால் ராமேசுவரம் கடற்பகுதி யில் ஐம்பது வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அங்குள்ள தெற்குவாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அண்மைய சில தினங்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது என்றும் கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடல் அரிப்பு காரணமாக ஐம்பது வீடுகள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அரசாங்கம் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தங்க நாணயங்களை வாங்க 31.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

சென்னை: திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்க நாணயங்களை வாங்கவும் உதவித்தொகை வழங்கவும் 31.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக 7,800 தங்க நாணயங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் அவை தலா எட்டு கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பை முடித்துள்ள பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக, ஐம்பதாயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்க நாணயமும் மற்ற பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகின்றன.

ஜெயக்குமார்: அதிமுக இணைப்பு குறித்து சசிகலா கூறுவது பொய்

சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுகவை இணைப்பதற்கு தாம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக சசிகலா தரப்பினர் கூறுவது அப்பட்டமான பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர். அவர் சொல்வதை எல்லாம் யாரும் பொருட்படுத்த வேண்டாம்," என்றார் ஜெயக்குமார்.

புத்தாண்டுப் பரிசாக மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு: ராமதாஸ் வலியுறுத்து

சென்னை: தமிழக மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்று குறிப்பிட்டுள்ளார். "சாலை விபத்துகள், மனநலப் பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம். மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் கூடுதலாக உள்ளது," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.