நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் கோடநாடு சென்ற அவர், இவ்வழக்குடன் தொடர்புடையவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் கோடநாடு பகுதியில் உள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு அங்குள்ள பங்களாவில் இருந்து சில முக்கிய ஆவணங்கள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், அந்தப் பங்களாவின் பாதுகாவலர் ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை சரிவர நடைபெறவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடின.
இதையடுத்து, திமுக ஆட்சி அமைந்ததும் வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜுக்கும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. கூலிப்படைத் தலைவன் சயான் கைது செய்யப்பட்டான்.
இவ்வழக்குடன் தொடர்புள்ளதாகக் கருதப்பட்டவர்களும் விசாரிக்கப்பட்டவர்களும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். எனினும் கொலை, கொள்ளைக்கான உண்மைக் காரணம் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் அண்மையில் கோடநாடு சென்று அங்கு இரு நாள்கள் முகாமிட்டு விசாரணை நடத்தி உள்ளார்.
அவரது இந்த வருகை குறித்து அங்குள்ள அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், சிபிசிஐடி பிரிவு ஐஜி தேன்மொழியும் கோடநாட்டில் பத்து நாள்கள் தங்கி இருந்ததாகவும் ஏற்கெனவே பணியில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் இருந்து அவர் விரிவான விசாரணை அறிக்கையைக் கேட்டுப் பெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை விசாரிக்கும் தனிப்படையில் மேலும் 34 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோடநாடு வழக்கு விசாரணை துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

