'சிலரது கற்பனைக் கதைகளை அறிவுமிக்க சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது'
சென்னை: கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அதை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் (படம்) கூறியுள்ளார்.
கற்பனைக் கதைகளை ஏற்கக்கூடாது என்றும் அறிவுமிக்க சமுதாயம் அவற்றை ஏற்றுக்கொள்ளாது என்றும் சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"வரலாற்றுத் திரிபுதான் நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து. எனவே பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.
"வரலாற்று உணர்வை ஊட்டுதல், அறிவியல் பார்வையை உருவாக்குதல் ஆகியவைதான் இன்றைய காலத்தின் தேவை. வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது, அதைப் படித்தால் வேலை கிடைக்குமா, நல்ல ஊதியம் கிடைக்குமா? என்பதுதான் பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, ஊதியத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காகவும் வரலாற்றைப் படித்தாக வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த கால வரலாற்றைப் படிப்பவர்களால் மட்டும்தான் நிகழ்கால வரலாற்றைப் படைக்க முடியும் என்றும் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், அவ்வாறு படிக்கப்படும் வரலாறு, அறிவியல் பூர்வமான உண்மையான வகையில் அமைந்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறிய அவர், மதச்சார்பின்மை என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மை என்றார்.
"தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு. நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக் கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல.
"அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது என்றார் அவர்.
சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. 1,150 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
'தண் பொருநை' என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
"இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
"அது வரலாற்று அரசர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, வெற்றிகளைப் பிரதிபலிக்கும் ஆவணமாக மட்டும் இருக்கக்கூடாது. அது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

