சென்னை: மத்திய அரசு வழங்கும் 'ஆதார்' அட்டை போன்று தமிழக அரசும் 'மக்கள் ஐடி' எனப்படும் அடையாள அட்டையை வழங்க முடிவு செய்துள்ளதாக 'தமிழ் இந்து' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
'ஆதார்' அட்டையில் உள்ளது போன்று 'மக்கள் அடையாள' அட்டையிலும் பத்து முதல் 12 இலக்க எண் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளையும் சேகரித்து, மாநில அளவில் குடும்பத் தரவு தளத்தை உருவாக்க தமிழக அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மாநில தொழில்நுட்பம், மின்னிலக்கச் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மேற்கொள்ளும் எனத் தெரிய வந்துள்ளது.
பொது விநியோகத் துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாகச் சேகரித்து அளிக்கும் தரவுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, மக்கள் அட்டைக்கான இறுதிக்கட்ட தரவுகள் வகைப்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் மக்கள் அட்டையை விநியோகிப்பதன் மூலம் அரசாங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு அந்த அட்டை மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக இருக்கும்.
தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தரவுகளைச் சேகரிக்கும் பணி விரைவில் முடிவடையும் என மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது.
புதிய தரவு தளத்தை உருவாக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது. மிக விரைவில் தரவு தளத்தை அமைப்பதற்காக அடுத்தகட்ட பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

