சென்னை: கட்சி அலுவலக சாவி ஒருவரிடம் இருப்பதால் மட்டுமே கட்சிக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடி கொடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் உள்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைப் பிடிப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடையே கடும் போட்டி நிலவுவதுடன், இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதுமாக அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
அதிமுக பொதுக்குழுக் குழுவை கூட்டுவது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
ஒற்றைத் தலைமை விவகாரம்தான் உள்கட்சிப்பூசல் பெரிதாக வெடிக்க முக்கிய காரணமாக உள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
அதிமுக கட்சிக் கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் பதவி ஆகியவற்றைப் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தியது தவறு என்று குற்றம்சாட்டி உள்ள பழனிசாமி தரப்பு, இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு தமது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ளார் பன்னீர் செல்வம். அதில், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தம்மை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அது முடியும் என்றும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி உள்ளார்.
"ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதுபோன்று தேவையற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தால் அவதூறு வழக்கு தொடர்வேன்.
"அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக பழனிசாமி செயல்படுகிறார். அதிமுகவின் கட்சிக் கொடியையும் பெயரையும் பயன்படுத்துவது தவறு இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது," என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

